News: http://Http://blog.leomohan.net - புதிய வலைப்பூ கணினி தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு

Login

Login with username, password and session length

+  தேனீ மன்றம் - Theni Mantram
|-+  மணிமேகலை
| |-+  சிறுகதை
| | |-+  அப்புசாமி.காம்
Subject Statistics
Topic: அப்புசாமி.காம் Replies: 0 posts
Read 1523 times
Pages: [1]   Go Down
Print
Author Topic: அப்புசாமி.காம்  (Read 1523 times)
leomohan
phpBB SuperStar
*****

Karma: 0
Offline Offline

Posts: 853



View Profile WWW
« on: June 08, 2009, 01:29:38 AM »

விஷ்ணு இலையில் உட்கார ஆள் கிடைக்கவில்லை.

மாமூலாக மாப்பிள்ளைகள் யாராவது சிக்குவார்கள்? திடீரென்று ஆட்டோ ஸ்டிரைக்கினால் போக்குவரத்து ஸ்தம்பித்து மாப்பிள்ளை வகையறா யாரும் தலை காட்டவில்லை.

தற்காலத்தில் விஸ்தாரமாகத் திதி கொடுப்பவர்கள், (சிரார்த்தம், திவசம் என்றும் குறிப்பிடப்படும்) அருகிவிட்டனர். மழைப் பிடிப்புப் பிரதேசங்கள் மாதிரி நகரில் ஒரு சில வட்டாரங்கள் சிரார்த்தம் செய்ய தோதான இடமாக உள்ளன. என் மாதிரி நகரில் எங்கோ மூலை முடுக்கில் இருப்பவர்கள் பாடு சிரமம்தான்.

என் மீதுள்ள அபிமானத்தினால் வெகு தொலைவிலிருந்து ஒரு சாஸ்திரி மாமா என் வீட்டு சிரார்த்த காரியங்களுக்குத் தவறாமல் நீண்டகாலமாக வந்து கொண்டிருந்தார். கொஞ்சம் தள்ளாதவராகிவிட்டதால் அப்பப்போ தள்ளி விடுவதற்காக கூடவே ஒரு துணை புரோகிதரை (சுமார் ரகம்) அழைத்து வருவார்.

பம்மலிலிருந்து பலவித உபாயங்களைப் பயன்படுத்தி மெதுவாக பகல் பன்னிரெண்டுக்குத் தக்க துணையுடன் வந்து சேருவார். சிலபேர் மாதிரி வந்ததும் ஸ்னானம் கீனம் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லமாட்டார். தண்ணிக் கஷ்டத்தின் சிரமம் தெரிந்தவர். சாஸ்திரத்தில் பகல் பன்னிரண்டுக்கு மேல்தான் சிரார்த்தமே செய்யத் தொடங்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறது என்று சில மேற்கோள்கள் காட்டுவார்.

சிரார்த்தம் என்பதை அவர் முடிக்க பிற்பகல் மூன்று மணி ஆகிவிடும்.

திவசத்தன்று பிதுர்களுக்கு இரண்டு இலையும், விஷ்ணுவுக்கு ஓர் இலையும் போடுவது வழக்கம். பிதுர்க்களின் இலையில் அழைக்கப்பட்ட இரண்டு பிராமணர்கள் உட்கார வைக்கப்படுவார்கள். விஷ்ணு இலைக்கு வீட்டிலுள்ள மாப்பிள்ளையோ அல்லது உறவினர் யாராவதோ அல்லது சிறுவன் யாராவதோ உட்காருவது வழக்கம். யாருமே கிடைக்கவில்லையென்றால் வெளியிலிருந்து நமக்குத் தெரிந்த நண்பரையோ, உறவுக்காரரையோ இதற்கென்று ஸ்பெஷலாக வரவழைப்பதும் உண்டு.

குறிப்பிட்ட வருடம் விஷ்ணு இலையில் உட்கார ஒருத்தரும் அகப்படவில்லை.

அழகான சாப்பாடு விஷ்ணு இலையில் கண்ணைப் பறித்தது. சில வீடுகளில், விஷ்ணு இலைக்கு ஓரவஞ்சனை செய்வார்கள். சும்மா அது ஒள ஒளாக் கட்டைக்குத் தானே என்று அந்த இலைக்குத் துளித் துளி பரிமாறுவார்கள்.

எங்கள் வீட்டில் 'கியாரண்டியாக எந்த மாப்பிள்ளையாவது உட்காருவதால் எல்லாமே தாராளமாகப் பரிமாறிவிடுவார்கள். சம்பந்தப்பட்ட மாப்பிள்ளையின் மனைவியும் - அதாவது என் பெண்ணும் - ஸ்தலத்திலேயே இருப்பதால் விஷ்ணு இலை தன் கணவனுக்குரிய இலை என்பதாகச் சற்றுத் தாராளமாகவே சகலமும் மேற்படி இலைக்குச் சேரும்படி பார்த்துக் கொள்வாள்.

'மெளனேன போக்த்வா' என்று ஒரு Term சொல்வார்கள். அதாவது பித்ரு வடிவாக வந்த பிராம்மணர்கள் மெளனமாகச் சாப்பிடுவார்களாக. 'இந்த அயிட்டத்திலே உப்பு இல்லை. கொஞ்சம் விக்குகிறது. இது கொஞ்சம் புளி தூக்கல்' என்றெல்லாம் சாப்பிடுகிற பிராம்மணர்கள் சொல்லக்கூடாது. சுருக்கமாக, கொச்சையாக சொல்வதானால் 'வாயை மூடிண்டு சாப்பிட்டுப் போங்கோ.'

சில பேர் சட்டத்தை மீறி, 'மோர்க் குழம்புக்குத் துளி உப்பு போட்டிருந்தியானால் இன்னும் ஜோராக இருந்திருக்கும். அதனால் பரவாயில்லை. இது வேணும் அது வேணும்னு திதிக்கு சாப்பிடறவா கேட்கப் படாது. சும்மா சொன்னேன்.' என்று சொல்லாமே சொல்லி உப்பு கொண்டுவரச் சொல்லிவிடுவார்கள்.

 
விஷ்ணு இலையைப் பொறுத்த மட்டில் இலை முன்னால் ஒரு சந்தனக் கட்டையை வைப்பது வழக்கம். சில வீடுகளில் விஷ்ணு பாதம் என்று ஒரு தட்டை விஷ்ணு பாதம் பொறித்தது - எந்தக் காலத்திலோ மூதாதையர் காசியிலிருந்து வாங்கி வந்த சிறு தாம்பாளத் தட்டு - அதைத் திவசத்தன்று மட்டும் பளபளவென்று தேய்த்து வைப்பது வழக்கம்.

சந்தனக் கட்டையில் விஷ்ணுவை ஆவாஹனம் செய்திருந்தாலும், அவர் இதர பிராமின்ஸ¤களுடன் சரி சமமாக அமர்ந்து சாப்பிட நேரில் வரமாட்டார்.

ஆகவே பரிமாறியது பரிமாறியபடியே இருக்கும். வேறு யாராவதுதான் அந்த இலையில் அமரவேண்டும்.

திவசம் செய்கிறவர்களே சாப்பிட்டு விடக்கூடாது. அதில் உட்கார சில கண்டிஷன்கள் உண்டு.

அப்படி யாருமே உட்காரக் கிடைக்கவில்லையானால்?

எனக்கு இந்த வருஷம்தான் அந்தப் பிரசினை, வேலை நிறுத்தத்தால் - முக்கியமாக ஆட்டோ நிறுத்தத்தினால் ஏற்பட்டது.

பம்மல் சாஸ்திரி மாமாவிடம் பிரச்னையைச் சொன்னதும் அவர் துளிக் கலங்காமல், ''பேசாமல் ஏதாவது பசு மாட்டுக்குக் கொடுத்துடு!'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டார் - ஏதோ மந்தை மந்தையாக இங்கெல்லாம் பசுக்கள் கொட்டிக் கிடப்பது போல.

ஸிடியில் பசுமாடாவது கடாமாடாவது. அதனால் விஷ்ணு இலையை அப்படியே மடித்து பெரிய பளபள எவர்சில்வர் தூக்கில் போட்டுக்கொண்டு, 'ஜுராஸிக் பேபி நாடக மலையாள வைத்தியர்' மாதிரி தெருத் தெருவாக மாடு பார்க்கப் புறப்பட்டேன். பலரை விசாரித்தேன். தங்கள் மாடுகளைப் போலீஸ் பிடித்துப் போன சோக வரலாறுகள்தான் கிடைத்தன. 'காஞ்சிபுரம் போனால் சகல மாடுகளையும் பார்க்கலாம்' என்றார் ஒரு பால்காரர்.

ஆனால் என்னால் பசு மாடு தேடி பாரெங்கும் அலைய முடியாது. வயிற்றில் பசிக் குடைச்சல் வேறு.

சாஸ்திரத்திலும் 'சிரார்த்தம் முடிந்த பத்து நிமிஷத்தில் இலையைப் போட்டு கிரகஸ்தன் சாப்பிடக் கடவன்' என்று சொல்லியிருக்கிறது. (இதை வருஷா வருஷம் பம்மல் சாஸ்திரிகள் சொல்வது வழக்கம்.)

நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று இலை போட்டு வைத்திருந்த பாத்திரத்துடன் நானே ஒரு சோக பாத்திரமாகச் சென்று கொண்டிருந்தபோது, 'அம்மா!' என்று ஓர் கம்பீரமான அழைப்பு.

எனது அம்மாவே குரல் கொடுப்பது போலிருந்தது. 'கன்றூஉஉஉஉஉக் குரலைக் கேட்டு கனிந்து வரும் பசுபோல்' குரல் வந்த திசையில் ஓடினேன்.

சில வாரம் முன் புதிதாகப் புனருத்தாரணமோ, ஜீர்ணோத்தாரணமோ செய்யப்பட்ட பெருமாள் கோவிலுக்குள்ளிருந்துதான் சத்தம் வந்தது.

கதவு லேசாகச் சாத்தியிருந்தது. அவசரத்துக்குப் பாபமில்லை என்று உள்ளே பிரவேசித்துவிட்டேன்.

கோவிலில் சுத்தமாக யாரும் கிடையாது. (அசுத்தமாகவும் யாரும் இல்லை.)

வெரிச்சோவென்றிருந்தது. கோவிலின் ஸைடு வாக்கில் ஒரு பசுமாடும் கன்றும் காணப்பட்டன. வெள்ளை வெளேர்ப் பசு. ஆனால் அதெல்லாம் எலும்பு. பசுவின் அசல் நிறம் எதுவோ.

தானம் கொடுக்கப்பட்டதை யாரோ கோவிலுக்குத் தானம் தந்துவிட்டார்களாம்.

கையிலிருந்த போணியைத் திறந்து இலையிலிருந்தவைகளை அள்ளி அள்ளி மாட்டுக்குத் தந்தேன். கபகபவென்று எல்லாவற்றையும் தின்றுவிட்டது. இலையை மட்டும் அதனால் சாப்பிட முடியவில்லை.

மகா திருப்தியுடன் காலி டிபன் போணியுடன் (காலி என்று சொல்லக்கூடாது. புண்ணியம் நிறைந்த போணியுடன்) புறப்படும்போது, ''ஸ்வாமின்னு'' என்ற ஓர் குரல் ஸ்பீடு பிரேக்கராக என் வேகத்தை மட்டுப்படுத்தியது.

கோவில் பட்டாச்சாரியார்! ''என்ன? மாட்டுக்கு எதுனாக் கொடுத்தீரா?'' என்றார்.

''ஒண்ணுமில்லே. திதி.''


''கேட்கப்படாதோ!'' என்றார் சற்று உஷ்ணமாக. ''அது தானத்திலே வந்த மாடு. அதற்கு ஒரு புண்ணியாஹ்வாசனம் அது இது பண்ணறதுக்குத்தான் ஓடி ஆடிண்டிருக்கேன். அதெல்லாம் முடிஞ்சுட்ட பிறகுதான் நாங்கள் ஸ்வீகரித்துக் கொண்டதாக அர்த்தம். போஹ்றது! என்ன கொடுத்தீர். வீட்டிலே என்ன விசேஷம். எதுனா கிரகப்ரவேசமா?''

நான் தடுமாறினேன். திவசம்! விஷ்ணு இலை அது இதுன்னா கோவிச்சுப்பாரோ?

''ஆமாம். ஆமாம். கிரகப்ரவேசம். நிறையப் பழம் அது இது....''

''சரி. சரி. என்ன கொடுத்தீரோ. உம்ம விலாசத்தையும் கொடுத்துட்டுப் போம். மாட்டுக்கு ஏதானும் ஆஹ்னால் உமக்குத்தான் சொல்லி அனுப்புவேன்.''

''நான் ஒண்ணும் வெடனரி டாக்டர் இல்லை' என்று அவர் முகத்திலடித்தாற்போல் பதில் சொல்லியிருப்பேன். ஆனாலும் என் விலாசத்தை எழுதிக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டேன்.

ராத்திரி பதினொரு மணி!

'ஹம்மா! ஹம்மா! ஹம்ம ஹம்ம ஹம்மா!' என்று பெரும் சத்தம், உறுமல்.

பயந்து நடுங்கிக் கொண்டு கதவைத் திறந்தால் ஒரு பயங்கர ஆள் பசுமாட்டைப் பிடித்துக்கொண்டு ''வுங்க வூட்டிலே வுட்டுட்டு வரச் சொன்னாரு அய்யிரு! மாட்டுக்கு வயிறு பிடுங்கிக்கிச்சு. மூணு வாட்டி கீழே மடிஞ்சு மடிஞ்சு வுழுந்திட்டுது. கன்னுக்குட்டி தேவலாம். அதுக்கு ஒண்ணும் நீ குடுக்கலையாங் காட்டியும்... எங்கே கட்டட்டும் சொல்லு. இப்படி ஜன்னல் கம்பியிலே கட்டிட்டுப் போறேன்.''

அவன் போயாச்சு.

மனைவியின் நெடுநாள் ஆசை நிறைவேறியது.

'விடி காலையிலே பசுஞ் சாணத்தினால் பசுபசுவென்று வாசல் தெளிக்கணும். இங்கெல்லாம் அதற்குக் கொடுப்பினை ஏது?' என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பாள்.

வாசலைப் பார்த்து அசந்து போய்விட்டாள். பச்சைப் பசேல் என்று வாசல் பூரா பசுஞ் சாணம் பீய்ச்சி அடித்திருந்தது.

''இனிமேல் கோலம் போடறதும் லட்சுமி தேவி உள்ளே வர்ரதும்தான் பாக்கி!'' என்றேன்.

லட்சுமியும் வந்தாச்சு! எங்க வீட்டு வேலைக்காரி.

''பார்த்து! பார்த்து!'' என்று எங்கள் எச்சரிக்கை அவள் காதில் விழுமுன் முன்னேறி வந்ததால் தொபுகடீரென்று சாணி வழுக்கி கீழே விழுந்துவிட்டாள்.

அவளுடைய கால் எலும்பு பிசகித் தேவலையாக ஒரு மாசமாயிற்று. வைத்திய செலவைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டோம்.

பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் அடிக்கடி ஆள் விட்டு, ''பசு எப்படி இருக்கு. தேறி வருதா?'' என்று கேட்டு வருகிறார்.

தனிக் கொட்டிலில் அது இருந்து வருகிறது. பிரசவமான பெண்ணைப் பிறந்த வீட்டில் வைத்துக் கொண்டாடுவதுபோல அதை நாங்கள் பராமரித்து வருகிறோம்.

உடம்பைத் தேற்றி முதலில் அதைக் கோவிலிலே கொண்டு விடணும். கொசு தாங்கலை. கொசுத் தொல்லை தவிர ராத்திரி பூரா, கண்ணுக்குட்டி ஞாபகமாக மூணு நிமிஷத்துக்கு ஒரு தரம் 'ஹம்ம ஹம்ம!' என்று செருமுகிறது.

அந்தப் பாவம்தான் எதற்கு என்று ''கன்னுக் குட்டியையும் அனுப்பி வெச்சிடுங்கோ'' என்றேன் பட்டாச்சாரியாரிடம். அவர் ''நானே சொல்லணும்னு இருந்தேன். மாட்டையும் கன்னையும் பிரிக்கப்படாது. அந்தப் பாவம் உங்களுக்கு ஏன்?' என்று கன்றுக் குட்டியையும் சாயந்தரமே அனுப்பி வைத்துவிட்டார்.

கன்றும் தாயும் இணைந்தனர். அது அம்மா என்று கூப்பிட இது 'இங்கேதாண்டி கண்ணே இருக்கேன்' என்பது போல 'ம்மா...' என்று பதில் குரல் கொடுக்க..

''அடுத்த வருடம், விஷ்ணு இலைக்கு ஒரு விஷ்ணு தயார் பண்ணிக்கொண்டுதான் திவசமே பண்ணணும்'' என்றாள் மனைவி.
நன்றி‍http://www.appusami.com/
Logged

With regards,


Mohan
http://www.etheni.com
Pages: [1]   Go Up
Print
Jump to:  



Login with username, password and session length

Powered by SMF 1.1.11 | SMF © 2006-2009, Simple Machines LLC
Template made by Megamoose (WonderForum.com)
Page created in 0.105 seconds with 20 queries.