News: Google Maps உங்கள் செல்பேசியில் அறிமுகம். http://www.google.com/gmm தளத்தில் விபரம்

Login

Login with username, password and session length

+  தேனீ மன்றம் - Theni Mantram
|-+  வளையாபதி
| |-+  ஆன்மீகம்
| | |-+  பகவத் கீதை என் இன்றைய பார்வையிலே
Subject Statistics
Topic: பகவத் கீதை என் இன்றைய பார்வையிலே Replies: 25 posts
Read 3736 times
Pages: 1 [2]   Go Down
Print
Author Topic: பகவத் கீதை என் இன்றைய பார்வையிலே  (Read 3736 times)
padmaja
Global Moderator
phpBB SuperHero
*****

Karma: 1
Offline Offline

Bahrain Bahrain

Posts: 320



View Profile WWW
« Reply #15 on: June 29, 2009, 08:33:24 AM »

கண்ணன் சொன்னான் -

செய்யும் செயல்களைவிட சிறந்தது புத்தி யோகமே
பலன்களில் நாட்டமுடையோர் விரும்புவது போகமே
எனவே சரணடைவாய் புத்தியில் என்ற கூற்றை ஏற்குமுன்
ஏனென்று சிறிது கேட்பாய் என் நண்பனே

நன்மை தீமையை கண்டறியும் திறன்
புத்திக்கு உண்டென்பதை அறிவாயல்லவா
சமநோக்கு பார்வை புத்தியால் அடைவதால்
செயல்களின் நல்லவையும் தீயவையும் அழியுமல்லவா

திறம்பட செய்யப்படும் செயல்களே யோகமாகும்
புத்திசாலிகள் தீயவை களைவது இவ்வழியே ஆகும்
பலன்களில் நாட்டமின்றியே அவர்தம் செயல்களும் சிறக்கும்
பிறப்பின் சுழற்சியிலிருந்து விடுபடுவதும் உறுதியாகும்

புத்தியைக் கொண்டு மோகத்தை களைவதனால்
கேட்டு உணர்ந்ததுவும் இனி கேட்டு உணரப்படுவதும்
சுருதி குறைந்து சுயநினைவிழந்து விடுவதால்
நடுநிலை என்றும் கொள்வாய் என் நண்பனே

எப்பொழுது உன் புத்தி கேட்டு உணர்ந்தவைகளை
புறக்கணித்து அசைவற்று சலனமற்று இருக்கிறதோ
எப்பொழுது ஆன்மாவில் நிலைத்து இருக்கிறதோ
அப்பொழுது ஆத்ம ஞானத்தை உணர்வாய் தோழனே


நான் கேட்டேன் –

இறையருளில் திளைத்து ஒன்றான மனிதனை
ஸ்தித பிரஞையுடன் வாழும் மனிதனை
இவ்வுலகில் அடையாளம் காண்பது எங்ஙனம்
அவர் பேசுவதும் அமர்வதும் நடப்பதும் எங்ஙனம்

கண்ணன் சொன்னான் –

ஆசைகளை அறவே விட்டொழித்திருப்பார்
மனதை தம்வசம் வைத்திருப்பார்
ஆன்மாவில் ஒன்றியே மகிழ்ந்திருப்பார்
சமநிலையடைந்த மனிதன் அவரேயாவார்

யாருடைய மனம் எந்நிலையிலும் கலங்கவில்லையோ
யார் செழிப்பிலும் போகத்தில் திளைக்கவில்லையோ
யார் பந்தம், பயம் மற்றும் கோபம் இவற்றின் பிடியில் சிக்கவில்லையோ
சந்தேகமின்றி அவரே ஞானி என்பதை தெரிந்து கொள்

அனைத்து திசைகளிலும் கால்களை உள்ளித்துக்கொள்ளும் ஆமையைப் போல்
புலன்களில் இருந்து தன் உணர்வுகளை இழுத்துக் கொள்வாரே
புலன்களும் அவரிடம் நெருங்க முடியாமல் தவிப்புடன் நிற்க
இறைவனைக் கண்ட அக்கணங்களில் அத்தவிப்பும் மறைந்திடுமே

நான் கேட்டேன் –

நீ கூறுவதை கேட்பதற்கு எளிதாய் இருக்கிறதே
எவரும் புத்தியை வெல்ல முடியும் என்றே தோன்றுகிறதே
சமநிலை அடைவது கடினமல்ல போல் தெரிகிறதே
நானே இலக்கு என்பது இப்பொழுது புரிகிறதே

கண்ணன் நகைத்துவிட்டு பிறகு கனிவுடன் சொன்னான் –

எளிதில் அடைவதல்ல நான் கூறியவை
புத்திசாலிகளையே புலன்கள் நன்கு ஏமாற்றுபவை
மனதை சூறாவளியாய் ஆக்கும் ஆற்றலுடையவை
முயற்சிகள் பல செய்தாலும் கலங்காதவை


நான் கேட்டேன் -

பிறகு எப்படி இருக்க வேண்டும் என்கிறாய் கேசவா


கண்ணன் தொடர்ந்தான் -

கண்கட்டும் புலன்களின் ஜாலங்களில் சிக்காமல்
அவற்றை அடக்கி ஒடுக்கி அமைதியாய்
புத்தி நிலைத்து அசையாது அமர்ந்திருக்க வேண்டும்
என்னை மட்டும் நினைத்திருக்க வேண்டும்


வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்த நான், செயலிழந்து அமர்ந்திருந்தேன். அப்பொழுதுதான் உணர்ந்தேன் ‘என்னை’ என்ற அவன் கூற்றினை?

ஓ............. இங்கு கண்ணன் உயிரும் உடலும், சதையும் அறிவை மயக்கும் அழகும் உள்ள கண்ணனாக இல்லாமல், கேலிப் பேசி சிரித்து மகிழும் கிருஷ்ணனாக இல்லாமல், எங்கும் நிறைந்த உருவும் அருவும் இல்லாத அந்த பரம்பொருளாய் அல்லவா சொல்கிறான்?

ஆனால் அவன் கூறுவது நடக்கக் கூடிய காரியமா என்ன?  மனம் தொய்ந்தது.

இதோ ஒரு வருடத்திற்கு முன் நான் எழுதி வைத்த ஆங்கிலக் கவிதையை எடுத்துப் படிக்கிறேன்......


Beauty invites special compliments
I crave not to have one

Wealth cheers cruel attitudes
I need not retain one


Power rules ravening fowls
I grab not to enjoy one

Education shelters intellectual pleasures
I dream not to master one

Hatred guarantees feudal enemities
I desire not to possess one

Anger ignites mental imbalances
I like not to identify one

Jealousy cooks ugly delicacies
I yearn not to taste one

Selfishness adorns human minds
I strive not to buy one

Patience befriends many virtues
I dare not to lose one

Giving destroys grumbling greediness
I long to be blessed with one

Love transcends all boundaries
I pray only for such a one


இனி வரும் நாட்களில் கற்றுக் கொள்ளப் போகிறேனோ இல்லையோ, என் மனம் இக்கவிதையில் லயித்து இறுதி வரிகளில் நிலைக்கிறது.

Love transcends all boundaries
I pray only for such a one

இதுவே என் இன்றைய பிரார்த்தனையும்.

வரும் நாட்களிலாவது இந்த அஞ்ஞானிக்கு ஏதாவது புரியுமா என்ற சிந்தனையுடனே கீதையை வணங்கி மூடி வைக்கிறேன்..

Logged

அன்பே சிவம்
பத்மஜா
padmaja
Global Moderator
phpBB SuperHero
*****

Karma: 1
Offline Offline

Bahrain Bahrain

Posts: 320



View Profile WWW
« Reply #16 on: July 08, 2009, 03:36:38 AM »

முத்து ஆறு

Serve, Love, Give, Purify, Meditate, Realise

-   Swami Sivananda

………………….


Om Sahanaavavathu Sahanau bhunakthu
Saha veeryam karavaavahai
Tejasvinaa vadheethamasthu
Maa vidh vishaavahai
Om Shanthi Shanthi Shanthi


வழிபாடு, பிரார்த்தனை, வேண்டுதல் – இவை மிகவும் சுவாரஸ்யமானவை.

சராசரி மனிதன் ஒருவனிடம் எத்தனை விதமான செல்வங்கள் இருந்தாலும் ‘போதும்’ என்ற மனம் மட்டும் இருப்பதில்லை. தன்னிடம் இல்லாத ஒன்றிற்கு ஏங்குபவனாகவே இருக்கிறான். இல்லையெனில் உற்றார் உறவினர் நன்மைக்காக வாழ்நாள் முழுவதும் வேண்டுகிறான்.

உதாரணத்திற்கு திருப்பதி மலையானுடன் பேரம் பேசுகிறான்; இல்லையேல் அம்மனிடம் காவடி தூக்குவதாக ஒப்பந்தம் செய்ய வைக்கிறான்.


வேண்டும் வேண்டும் என்று சொல்லும் மனமே
வேண்டுவது அனைத்தும் கிடைத்திடுமோ

வேண்டியே உருகி தவமாய் நின்றாலும்
வேண்டியதால் உன்னிடம் வந்திடுமோ

வேண்டுவதால் விரும்பியவை கிடைத்தாலும்
வேண்டுவதை நிறுத்தவும் மனம் வருமோ


ஆக, ‘என் வாழ்வே நீ தந்த அரிய பரிசல்லவோ!’ என்று ஏன் பிரார்த்தனை செய்ய முடிவதில்லை?  காரணம் தினமும் பன்மடங்காக பெருகும் நம் தேவைகளும் ஆசைகளும், தேவைகளா ஆசைகளா பேராசைகளா என்றே புரியாத நம் மனநிலையும்.

பின் பிரார்த்தனை என்பது இருக்க வேண்டும் என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் நமக்கு கற்றுத் தருகிறார் பாருங்கள்...


Mother, here is thy virtue, here is thy vice;
take them both and grant me only pure love for thee;
Here is thy knowledge, here is thy ignorance;
   take them both and grant me only pure love for thee;
Here is thy purity, here is thy impurity;
   take them both and grant me only pure love for thee;
Here is thy dharma, here is thy adharma;
   take them both and grant me only pure love for thee;


தர்மம் என்பது என்ன? பலர் பலவிதமாய் இதற்கு விளக்கமளித்தாலும், மனிதனின் ஒரே தர்மம் தன் உண்மை நிலையை உணர்தலேயாகும். இங்கு ராமகிருஷ்ணர் எதை தர்மம் என்று கூறுகிறார்? அவருக்கு தெரியாததா என்ன?

அவர் கூறுவது நன்மை தீமை என்று மனிதனே வரையறுத்துள்ள தர்ம அதர்மங்களையே. இதில் விசேஷம் என்னவென்றால் நன்மையும் தீமையும் நம் பார்வையில்தான் இருக்கிறது என்பது நமக்கு தெரிவதில்லை. இதை மறந்து நான் செய்வது மட்டுமே தர்மம் என்றும் மற்றவர் செய்வது அதர்மம் என்றும் நம் குறுகிய அறிவையும் ஞானத்தையும் கொண்டு தீர்ப்பு எழுதிவிடுகிறோம். இந்த வம்பே வேண்டாம் என்று நினைத்தாரோ என்னவோ, அந்த மகான் இரண்டையும் நீயே வைத்துக் கொள் என்று தெய்வ அன்னையிடம் முறையிடுகிறார். இல்லை சரணடைகிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ‘நான் சரணடைந்துவிட்டேன்’ என்று நான் வாய்மொழியாக கூறிவிடுகிறேன். ஆனால் உண்மையில் அது நடப்பது இல்லை. நடக்க விடுவதும் இல்லை.

உண்மை சரணடைதல் ஞானி ஒருவரால் மட்டுமே முடியும் என்று எங்கோ படித்த ஞாபகம் வருகிறது.

ஞானியால் எதையும் செய்ய முடியும்
ஆனால் அவருக்கு அகந்தையில்லை
ஞானியால் எதையும் ஏற்க முடியும்
ஆனால் அவருக்கு சுக-துக்கமில்லை
ஞானியால் எதையும் தந்துவிட முடியும்
ஏனெனில் எதுவும் அவருடையதில்லை
என்ற ஞானம் மறைவதில்லை


இப்படி தன்னிச்சை பறவைப் போல் வாழ வேண்டுமெனில் நான் ஞானியாக வேண்டும்.

முதலில் வாழும் கலையைப் பற்றி அறிந்து, அதன்படி வாழ வேண்டும். அதற்கு, என்னை சரியான பாதையில் வழி நடத்தி செல்ல உற்ற துணை வேண்டும். அத்துணை அப்பாதையை முன்னரே கடந்தவராகவும் அதன் மேடு பள்ளங்களைப் பற்றி எனக்கு எடுத்துரைக்கும் பொறுமை உடையவராகவும் இருக்க வேண்டும். அவரே என் குரு.

இந்த ஆத்ம ஞானத்தை எப்படி அடைவது? ஏனெனில் இவ்வுலக கவர்ச்சி என்னை கட்டியிழுக்கிறதே. காண்பவை நமதே என்று எண்ணத் தோன்றுகிறதே, பொருட்களின் மோகத்தில் அலைகிறதே, உணர்வுகளால் தடுமாறுகிறதே...

இப்படி என்னை சுற்றி பல அகழிகளும் அதில் பசியுடன் காத்திருக்கும் முதலைகளும் இருக்கின்ற போது, நான் எப்படி இவைகளைக் கடப்பது? பறந்து கடக்கும் சக்தியை இறைவன் தந்தால் எத்தனை நன்றாக இருக்கும்?

ஆனால், அப்படி ஒரே தாண்டலில் எதையும் அடைய முடியாது என்பதே கசப்பான உண்மை. மெல்ல மெல்ல, சிறுக சிறுக, அறிவையும் நெஞ்சையும் கொண்டு தாண்டல் வேண்டும். அதற்கு முதலில் அதன் flow-chart தெரிய வேண்டும்.

நான் என்னவென்று கண்ணனை கண்ணால் கேட்க, அவன் விடையளிக்கிறான் பாருங்கள்....


மனிதன் பொருட்களைப் பற்றி நினைக்கையிலே
பொருட்களின் மேல் பற்றுதல் ஏற்பட
பற்றுதலால் அளவில்லா ஆசைப் பிறக்க
நிறைவேறா ஆசை கோபத்தைத் தூண்ட

கோபத்தால் மதிகெட்டு சிந்தனை சிதற
மதிமயக்கத்தால் நினைவுகளும் காணாமல் போக
மறதியால் நடுநிலைமையும் அழிந்து விட
நடுநிலைமையின் அழிவில் அவனும் அழிகிறான்


ஆஹா.... இப்பொழுது புரிந்தது நான் எங்கிருக்கிறேன் என்று. வேறு என்ன? ஆரம்பக் கட்டத்திலேதான். ஆனால் கட்டங்களை கடக்கும் பொறுமையும், பொறுப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையையும் என் நண்பன் ஊட்ட மாட்டானா என்ன? நிச்சயம் தருவான்.


ஞானியின் நிலை என்ன என்று நான் அடுத்தக் கேள்விக் கேட்க, கண்ணன் தொடர்கிறான்.....
Logged

அன்பே சிவம்
பத்மஜா
padmaja
Global Moderator
phpBB SuperHero
*****

Karma: 1
Offline Offline

Bahrain Bahrain

Posts: 320



View Profile WWW
« Reply #17 on: July 08, 2009, 03:40:04 AM »


ஆனால் சுயக்கட்டுபாடு உடைய மனிதன்
பொருட்களை நுகர்ந்து அனுபவித்து கொண்டிருந்தாலும்
புலன்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதனால்
பொருட்களின்பால் ஈர்ப்பும் எதிர்ப்புமின்றி அமைதியடைகிறான்

இங்ஙனம் அமைதியான மனத்துடன் சிந்திக்கிறான்
தெளிந்த புத்தியுடன் பொருட்களை காண்கிறான்
நடுநிலை புத்தியைக் கொண்டு வாழ்கிறான்
அவ்வமைதியில் வலிகளனைத்தும் மறைவதை உணர்கிறான்



மேலும் என்னைப் போன்றோருக்காக ஏதோ கூறுகிறான் பாருங்கள்.....

நிலையற்றவனுக்கு என்றும் அறிவில்லை
அறிவிலிக்கு தியானம் கைகூடுவதில்லை
தியானமற்றவன் அமைதியை உணர்வதில்லை
அமைதியற்றவன் மகிழ்ச்சியை காண்பதில்லை

மனம் புலன்களின் விளையாட்டில் மயங்க
காற்றால் நீரில் தள்ளப்படும் படகைப்போல
நடுநிலை சிந்தனையை இழந்து தடுமாறி
மனம் போன போக்கில் அவனும் போகிறான்

ஆகவே, புரிந்துகொள் எனதருமை நண்பனே
காணும் உணரும் பொருட்களில் இருந்து
தன் புலன்களை எவனொருவன் கட்டுப்படுத்துகிறானோ
அவன் அறிவும் ஞானமும் நிலைபெறுகின்றன

அனைத்து உயிர்களுக்கும் இரவாகும் நேரம்
ஞானிக்கோ அதுவே விழித்திருக்கும் காலம்
அனைத்து உயிர்களும் விழித்திருக்கும் நேரம்
முனிவருக்கோ அதுவே இரவாகும் காலம்

நீர்நிலைகள் யாவும் கடலில் புகுவதைப்போல
ஆசைகள் யாவும் அவனுள் நுழைந்தாலும்
நீரை உள்வாங்கியும் மாற்றமில்லா கடலைப்போல
ஆசையற்ற மனிதனாய் அமைதி அடைகிறான்


குழம்பியபடி நான் கேட்டேன் –

அமைதியடைந்தவுடன் இவ்வுலகை துறந்திடுவாரோ இல்லை இறந்திடுவாரோ என்று........


கண்ணனுக்கோ ஒரே சிரிப்பு என் அறியாமையால் விழுந்த வார்த்தைகளைக் கேட்டு. 

கண்ணன் சொன்னான் –

ஓடுவது எங்கு நண்பனே, சிறிது சிந்தித்துப்பார்
ஆசைகளை விட்டதனால் நிம்மதியுடன் இருப்பார்
‘நான்’, ‘எனது’ என்னும் இறுமாப்பின்றி
ஏக்கமின்றி மகிழ்வுடன் வாழ்வை கழிப்பார்

இதுவே பிரம்மநிலை என்பதை குறிப்பதாகும்
இதை அடைந்தவர் தொலைவதில்லை எங்கும்
வாழ்வின் இறுதிவரை அமைதியில் நிலைத்திருப்பதாகும்
அனைத்தும் பிரம்மம் என்பதை உணர்வதாகும்

பிரம்மம் என்பது என்ன? வேதங்களில் கூறப்பட்ட கடவுள்(கள்) யார்? வேதம் கற்பது என்றால் என்ன? குரு என்பவர் யார்? எவ்வித செயல்களை செய்தால் பிரம்ம நிலையடைய முடியும்? இதற்கு தொழில்முறை விதிகள் உண்டா? இவையனைத்தையும் பின்வரும் அத்தியாயங்களில் காண்போம்.

இத்துடன் கீதையின் இரண்டாவது அத்தியாயமும் முடிந்து விட்டது. இதுவரை கண்ணனிடம் படித்தவை, கற்றவை அனைத்தையும் ஒரு முறை மனதில் அலசுகிறேன்.

என் எண்ணங்கள் சரியானவையா, ஏதாவது மாற்றங்கள் உண்டா என்பதை உறுதி செய்ய முன்பொரு முறை கீதைப் படித்த கையோடு எழுதி வைத்த ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற இக்கவிதையை வாசிக்கிறேன்....


பிறந்து விட்டதால் ஏற்பட்ட மனக்குழப்பத்தாலா
குழப்பத்தால் மனதில் எழுந்த கேள்வியாலா
கேள்விகளின் பிரதிபலிப்பில் எழுந்த சஞ்சலத்தாலா
சஞ்சலத்தால் நிறைந்த மனதின் பேதமையாலா
பேதமையோடு கூடிய அறிவின்னையாலா
அறிவின்மையால் எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பாலா
கொந்தளிப்பால் ஏற்பட்ட உடற் தொய்வினாலா
தொய்ந்த என் நடை கண்டு பலர் சிரித்ததாலா
சிரித்துக் கொண்டே அழுகையை அடக்கியதாலா
அடக்கி விட்டும் உணர்ந்த வேதனையாலா
வேதனையே வாழ்வா என்று மனங்கசிந்து உருகியதாலா
உருக்கத்திலே விழுந்த முத்தான கண்ணீர் துளிகளாலா
துளித்துளியாய் நகர்ந்த கொடுமையான நாட்களாலா
நாட்களின் எண்ணிக்கை வேகமாக நகர்ந்ததாலா
நகர்ந்ததால் உணர்ந்த அளப்பறிய விவேகத்தாலா
விவேகத்தோடு கூடிய மகத்தான அன்பினாலா
அன்பே சிவம் என்று நினைவு கூர்ந்ததாலா
கூர்ந்து சிந்தித்ததில் மலர்ந்த இதயத்தாலா
இதய வீணையின் அழகை இரசிக்க கற்றதாலா
கற்றவை எல்லாம் வீணே என்று உணர்ந்ததாலா
உணர்ந்ததால் வெளிப்பட்ட புன்சிரிப்பினாலா
சிரிப்பினாலே கிடைத்த உன்னத விடையினாலா
விடையாக ஒளிர்ந்த ஆத்ம ஜோதியினாலா
ஜோதியிலே தெரிந்த முகங்களினாலா
முகங்கள் அனைத்திலும் ஆன்மாவை கண்டதாலா
கண்டதால் தெளிந்தேன் இப்பேதையும்
நான் ஏன் பிறந்தேன் என்று


இந்நிலை அடைய, இந்நிலை உணர, நம் பயணத்தை தொடர்வோம்.

அடுத்த அத்தியாயம் கர்ம யோகத்தை அலசுகிறது. மீண்டும் விரிவாகப் படிப்போம். தெளிவடைவோம்.
 
Logged

அன்பே சிவம்
பத்மஜா
padmaja
Global Moderator
phpBB SuperHero
*****

Karma: 1
Offline Offline

Bahrain Bahrain

Posts: 320



View Profile WWW
« Reply #18 on: July 08, 2009, 03:42:27 AM »

முத்து ஏழு


He who wants to do good knocks at the gate; he who loves finds the gate open

- Rabindranath Tagore

……………

Tan man dhan sab tera, Sab kuch hai tera
Tera tere arpan, Tera tere arpan
Kya laage mera, Om Jayajagadeesha hare


கோவிலில் ஆரத்தி பாடும் பொழுது ‘எல்லாம் உனதே’ என்று எத்தனை பவ்யமாக பாடிவிடுகிறோம். ஆனால் வழிபாடு முடிந்தவுடனேயே பிரசாதம் சாப்பிட பந்தியில் துண்டைப் போட்டு என்னுடைய இடம் உன்னுடைய இடம் என்று பாகுபாடு பிரித்து விடுகிறோம்? அப்படியெனில் சில கணங்களே  ஆனாலும் மனமுருகி இறைவனிடம் நன்றி கூறிய அவ்வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டா இல்லையா?

உண்டு. இன்னும் சொல்ல வேண்டுமானால் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் உண்டு. அவற்றிற்கு நன்மை தீமை சக்தியும் உண்டு. இன்னும் சொல்ல போனால், சத்தியத்தை கடைபிடித்து வரும் ஒருவன், தன் மனதை ஒருநிலைப்படுத்தி கூறும் வார்த்தை ஒன்றொன்றிற்கும் மதிப்பு உண்டு. இதை நிரூபிக்க முடியுமா?

விஞ்ஞான பூர்வமாக கேட்டால் முடியாது. ஏனென்றால், புலன்களுக்கு அப்பாற்பட்டவையல்லவா இவை.

உதாரணத்திற்கு ஒரு கதையைப் பார்ப்போமா?

அதிகாலை வேளை. சிறுவன் முகுந்தன் தன் அக்கா உமாவுடன் வேப்பமர நிழலில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது உமா உள்ளே ஓடிச் சென்று மருந்தை எடுத்து வந்து தன் கையில் இருந்த கொப்பளத்தில் தடவினாள். முகுந்தன் சும்மா இல்லாமல் தானும் எடுத்து கையில் தடவிக் கொண்டான்.

ஏன் இப்படி செய்கிறாய் என்று சகோதரி கேட்க, ‘நாளை என் கையிலும் கொப்பளம் வந்துவிடும். அதற்கு இப்பொழுதே மருந்தை தடவுகிறேன்.’ என்று கூறினான் முகுந்தன்.

‘பொய்யா சொல்கிறாய்,’ என்று அவள் வினவ, தான் சொன்ன வார்த்தைகள் பொய்யாகிவிடுமோ என்ற தன்மான மிகுதியால் முகுந்தன் தன் மனதை ஒருநிலைப்படுத்தி, ‘இல்லை. நாளை என் கையில் இதே இடத்தில் ஒரு பெரிய கொப்பளம் இருக்கும். உன் கொப்பளம் இரண்டு மடங்காகவும் ஆகிவிடும்,’ என்று கூறினான்.

அடுத்த நாள் காலை. முகுந்தன் சொன்னது பலித்துவிட்டது. அலறியடித்துக் கொண்டே உமா தாயிடம் முறையிட, தாய் முகுந்தனை கடிந்து கொண்டாள், ‘நம் வார்த்தைகளுக்கு இருக்கும் சக்தியை தவறாக உபயோகப்படுத்தக் கூடாது.’

முகுந்தனின் கட்டி மருந்தினால் சரியாகாமல் அறுவை சிகிச்சை மூலமே எடுக்க வேண்டி வந்தது. அதன் தழும்பும் அவனுடன் தங்கி இறக்கும் வரை தன் அன்னையின் வார்த்தைகளை நினைவூட்டிக் கொண்டே இருந்தன.

அந்த முகுந்தன் உலகம் போற்றும் உன்னத மகான் ஆனபின் எழுதிய சுயசரிதையான ‘Autobiography of a Yogi’ யில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.

ஆக, நாம் கூறும் வார்த்தைகளுக்கு சக்தி உண்டு. இதையறியாமல் நாம் என்னவெல்லாம் பேசி விடுகிறோம்.

சரி. சக்தி உண்டோ இல்லையோ, நம் வள்ளுவர் என்ன சொல்கிறார் பார்ப்போம்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

இதை பள்ளியில் படித்து, பேச்சு போட்டியில் கலந்து கொண்டு பரிசையும் தட்டி விடுகிறோம். ஆனால் நடைமுறையில்.....

எத்தனை விதமாக பிறரை புண்படுத்துகிறோம்?

வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத அளவு நம் வார்த்தைகளால் பிறரை காயப்படுத்தி விடுகிறோம்.

கோபத்தில் என்ன பேசுகிறோம் என்ற சுயநினைவின்றி திட்டுகிறோம். தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறோம்.

நகைச்சுவை என்னும் போர்வை கொண்டு பிறரை புண்படுத்துகிறோம்.

நம்மை எப்படியேனும் தற்காத்து கொள்ள வேண்டி அடுத்தவரை சாடுகிறோம்.

ஒருவரின் இல்லத்தில் நன்றாக மூக்கைப் பிடித்து சாப்பிட்டுவிட்டு விருந்தோம்பலையும் ஏற்று பின்னர் அவர் சமையலையும் அவரையும் கேலி செய்து பேசுகிறோம்.

பிறரின் அங்க அவயங்களை கேலி செய்கிறோம். நடத்தையை விமர்சிக்கிறோம். அடுத்தவரின் அறிவையும் திறமையையும் தாக்குகிறோம். அடுத்தவர் செயல் அனைத்திலும் உள்ளர்த்தம் உண்டு என்று தப்பர்த்தம் கண்டு கடுமையாக பேசிவிடுகிறோம்.

உண்மை என்னவென்றே தெரியாமல் அறியாமையில் செய்யும் செயல்களே இவையனைத்தும்.  இருப்பினும்.....

நாம் யார் இதையெல்லாம் செய்ய? அழகில் மன்மதன்களா? ஒழுக்க சீலர்களா? சத்தியவான்களா? குணவான்களா? பெரிய அறிவாளிகளா? அனைத்து கலைகளிலும் வல்லவர்களா? உலகை உய்வித்தவர்களா? இல்லை பிறருக்கு ஒரு துரும்பையேனும் சுயநலமின்றி உதவியவர்களா?

ஒரு மகானைப் பார்த்து சரமாரியாக ஒருவர் திட்டிக் கொண்டே இருக்க, அவரோ யாரையோ பற்றி யாரோ சொல்வது போல் கண்டு கொள்ளாமல் இருந்தாராம். அவர் சீடன் இதைப்பற்றி கேட்க, அவர் அதற்கு, ‘அவன் கூறியதை எதையும் நான் ஏற்று  கொள்ளவில்லையே. ஏனெனில் அவை என்னை சார்ந்தவை இல்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் அந்த வார்த்தைகள் அதன் உரிமையாளரையே சென்றடையும்,’ என்று கூறி சிரித்தாராம்.

இதை நினைவில் வைத்து நம்மை பாகுபாடின்றி அலசினால், நாம் விட்ட கூரிய அம்புகள் அதி வேகத்தில் நம்மையே கிழிக்க வருவதை காணலாம்.

ஆனால் இந்த அலசலை செய்ய மட்டும் நமக்கு நேரமிருப்பதில்லை. இதற்கு ஒரு காரணம் நாம் செய்வதுதான் சரி, நாம் சொல்வதுதான் சரி என்ற நம் அகந்தையே.

நம்மை இப்படி யாராவது கூறினால் எப்படியிருக்கும் என்று ஒரு முறை மனதில், நெஞ்சில் அந்த வலியை உணர்ந்தோமானால், யாரைப் பற்றியும் புறம் பேசுவதை தவிர்த்து விடுவோம்.

ஆகவேதான் அனைவரையும் ஆசிர்வதிக்க கற்றுக் கொள்ள சொல்கிறார்கள் சான்றோர். ஏனெனில் நாம் மற்றவருக்காக அனுப்பிய சுகந்தம் நம் மூக்கையும் வந்தடையுமாம்.

Logged

அன்பே சிவம்
பத்மஜா
padmaja
Global Moderator
phpBB SuperHero
*****

Karma: 1
Offline Offline

Bahrain Bahrain

Posts: 320



View Profile WWW
« Reply #19 on: July 08, 2009, 03:44:37 AM »

ஆகவே, இன்னும் எத்தனை நிமிடங்கள் வாழ போகிறேன் என்று கூட தெரியாமல் வாழும் என் காலத்தில் ஏன் பொறாமையின்றி, வெறுப்பின்றி, கசப்பின்றி, கோபமின்றி, காழ்ப்புணர்ச்சியின்றி வாழக் கூடாது? ஏன் என் சிநேகிதத்தை, அன்பை, பாசத்தை நீட்ட கூடாது?

முடியும். என்னால் முடியும். அனைவராலும் முடியும்.

இனியாவது நான் பேசும் வார்த்தைகளில் கவனம் வைத்து பேச வேண்டும். ஏனெனில், நான் செய்யும் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு எண்ணமும், உதிர்த்துவிடும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நானே முதலாளி, நானே அனுபவிக்க போகும் தொழிலாளி என்று தெரிந்து தெளிந்துவிட்டது.

வார்த்தைகளால் மட்டுமல்ல, மனதாலும் பிறரை நிந்திக்காமல், உண்மையாய் நான் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் சொல்வதாவது?

Sathayaprathishtaayaam kriyaphalaashrayathvam

[When one is firmly established in speaking truth, the fruits of action become subservient to him]

இந்நிலை அடைந்தவர் பேசுவது அனைத்தும் சத்தியமாகும்.
 
அப்படியெனில் அவர் ஒரு மகாத்மாவாகத்தான் இருக்க முடியும். தம் வாழ்நாள் முழுதும் சத்தியத்தை கடைப்பிடித்த நம் தேசத்தந்தையின் வாக்குக்குதான் எத்தனை மதிப்பு என்பதை யார்தான் அறியார்?

எத்தனை செயல்கள் செய்து வந்தாலும், எத்தனை சோதனைகள் வந்தாலும் தன் ஞானத்தைக் கொண்டு அவற்றின் மேல் விருப்பு வெறுப்பின்றி, சத்தியத்தை, உண்மையை மட்டுமே கடைப்பிடித்தவரல்லவா அவர்.

ஆக உண்மை பேசுபவன் மட்டுமே உண்மையில் நிலைத்திருக்க அருகதையாகிறான் என்பது தெரிந்துவிட்டது. ஞானியின் ஒரே பக்கம் உண்மை என்பது போன அத்தியாயத்தில் கண்ணனின் உபதேசத்தில் இருந்து தெரிந்துவிட்டது. ஆனால் அவனோ கர்ம யோகத்தைப் பற்றியும் கூறினான் அல்லவா? இப்பொழுது எனக்கு தெரிய வேண்டியது ஒன்றே.


ஆகவே நான் கேட்டேன் –

கண்ணா! முதலில் ஞானமென்றாய் சரியென்றேன்
பிறகு எதிர்பார்ப்பற்ற செயல்களென்றாய் சரியென்றேன்
ஞானம் பெறு என்றாய் சரியென்றேன்
செயல்களில் கவனம்வை என்றாய் சரியென்றேன்

செயல்களைவிட ஞானமே சிறந்தது என்கிறாயே
அப்படி நீ நினைக்கும் பட்சத்தில்
என்னை மட்டும் ஏன் இக்கொடுமையான
செயல்களை செய் என்று கூறுகிறாய்

மாற்றி மாற்றி இப்படி பேசுவதால்
கண்கட்டும் வார்த்தைகளில் பேசுவதால்
என் மூளைக்கு எட்டாதவை பேசுவதால்
என்னை குழப்புவதற்கென்றே நீ பேசுவதால்

புரியாமல் விழிக்கும் எனக்கு வழிகாட்டு
ஒரு பாதையை மட்டும் எனக்கு காட்டு
என் தனிவழியை மட்டும் எடுத்துக்காட்டு
உயர்நிலை சேர்க்கும் பாதையை மட்டும் காட்டு


கண்ணன் சொன்னான் –

கலங்காதே குழம்பாதே எனதருமை தோழனே
இவ்வுலகில் இருவழி பாதை மட்டுமே
முன்னரே எடுத்தியம்பி இருந்தாலும் இப்பொழுது
கவனமாய் கேட்டு தெளிவாய் குற்றமற்றவனே

சாங்கியர்கள் தேர்ந்தெடுப்பது ஞான யோகமாகும்
தியானம் செய்து மனதை ஒருநிலைபடுத்தும் மார்க்கமாகும்
யோகிகள் தேர்ந்தெடுப்பது கர்ம யோகமாகும்
செயல்களை செய்தே தூய்மையை அடையும் மார்க்கமாகும்

செயல்களை செய்யாமல் இருப்பதனால் மட்டும்
செயலற்ற தன்மையை மனிதன் அடைவதில்லை
கடமைகளை துறந்து விட்டதனால் மட்டும்
செயற்கரிய உண்மை நிலையை அடைவதில்லை

செயலின்றி யாரும் இவ்வுலகில் வாழ முடியுமோ
மூச்சின்றி எவரும் உயிருடன் இருக்க முடியுமோ
செயல்களை செய்வது இவ்வுலக நியதியல்லவோ
ஏனெனில் இவை பிரகிருதியின் குணங்களல்லவோ


மூச்சு விடுவது கூட ஒரு செயலாகும். அதை நிறுத்தினால், சிவநிலை அடைவதற்கு பதில் சவநிலை அடைய வேண்டியதுதான். அப்படியெனில், என்னதான் கண்ணன் சொல்ல வருகிறான்? சிறிது கேட்போமா.


மேலும் கண்ணன் தொடர்ந்தான் -

எவனொருவன் செயலுருப்புகளை கட்டுப்படுத்தி
ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்தாலும்
புலன்கள் மூலம் மனதால் அலைகிறானோ
அவன் ஏமாற்றுக்காரன் என்பதில் சந்தேகமில்லை


இதையல்லவோ தியானம் என்ற பெயரில் பலரும் செய்து வருகிறோம். நம்மை கச்சிதமாக பிடித்து விட்டான் பாருங்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் நம்மை வேறு யாரும் ஏமாற்றுவதில்லை. நாமே ஏமாற்றுக்காரன் ஆகி ஏமாளியும் ஆகிறோம். அந்தோ பரிதாபம்!


மேலும் தொடர்கிறான் -

ஆனால் எவனொருவன் புலன்களை கட்டுப்படுத்தி
செயலுப்புகளைக் கொண்டு தொடர்ந்து செயல்புரிந்து
பந்த பாசங்களை ஒதுக்கிவைத்து தன்னலமின்றி இருக்கிறானோ
அந்த அகந்தையற்ற கர்ம யோகி சிறக்கிறான்

தோழா! உன் கடமையை செய்துகொண்டே இரு
ஏனெனில் செயல் செயலற்ற நிலையைவிட சிறந்தது
செயலற்ற தன்மையினால் உடலைகூட பராமரிக்க
இயலாது என்பதை நன்கு குறித்துக் கொள்வாய்

யக்ஞ நேரம் தவிர இவ்வுலகம்
எப்பொழுதும் கர்மங்களால் பிணைக்கப்பட்டுள்ளது
ஆகவே எந்த ஒரு காரியத்தையும்
யக்ஞ பாவனையுடன் மட்டுமே செய்வாய்

யக்ஞம் என்பது ஒரு நல்ல காரியத்திற்காக தன்னையே அர்ப்பணித்து செய்யும் செயலாகும். இம்மாதிரி செய்யப்படும் செயல்கள் மனிதனை கர்மங்களால் பிணைக்காது என்று மறைமுகமாக கூறினாலும், அனைத்து காரியத்தையும் இப்படியே செய் என்று நம்மிடம் மிகவும் கடினமான ஒரு விஷயத்தை சர்வசாதாரணமாக சொல்லிவிட்டானே என் நண்பன்.

முடியுமா என்னால்?



Logged

அன்பே சிவம்
பத்மஜா
padmaja
Global Moderator
phpBB SuperHero
*****

Karma: 1
Offline Offline

Bahrain Bahrain

Posts: 320



View Profile WWW
« Reply #20 on: July 12, 2009, 06:27:35 PM »

முத்து எட்டு

Don't talk about yourself; it will be done when you leave.

-   Wilson Mizner

………………

மாடியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அது ஒரு ஜனநடமாட்டமுள்ள தெருவாதலால் போவோர் வருவோர் அதிகமாக இருந்தனர். சாலையில் செல்லும் ஊர்திகளையும் அதில் பயணிக்கும் மக்களையும், சாலையோரமாக நடந்து செல்லும் மனிதர்களையும் பார்த்த போது ஏன் இவர்கள் இப்படி ஓடுகிறார்கள் என்று தோன்றியது. 

என்ன அர்த்தமற்ற வாழ்க்கை இது! பணமும், பொருளும் தேடித் தேடியே மனிதனின் வாழ்வு முடிந்துவிடுமோ? சிரிப்பு வந்தது. ஏனெனில் நான் பார்வையாளனாக அல்லவா அமர்ந்திருக்கிறேன். அதனால் அவர்களைப் பார்த்து என்னால் எளிதாக சிரிக்க முடிந்தது.

சிறிது நேரத்தில் பசியால் உடல் தொய்ந்துவிட, வயிரோ பெரிதாய் அலற, படியிறங்கி வீதியில் நடக்க ஆரம்பித்தேன்.

சில கவலை முகங்கள், சில சிரிக்கும் முகங்கள், சில கோப முகங்கள் என்று  அங்கு தெரிந்த பலவிதமான முகங்களைப் கவனித்துக் கொண்டே உணவு விடுதிக்கு சென்றேன். பசியைப் போக்கி உணவு விடுதியில் இருந்து வெளியே வந்த பின் புரிந்தது பணமும் வாழ்க்கைக்கு தேவையென்று.

நான் பார்வையாளனாக இருந்த போது அவர்களைப் பார்த்து சிரித்த எனக்கு, பசியில் வாடும் நிலையில் என்னையேப் பார்த்து என்னால் சிரிக்க முடியவில்லை. ஏனெனில் பசியை ஒதுக்க முடியவில்லை. பணத்தின் அருமையை சிறுமைப்படுத்த முடியவில்லை.

ஆக, நான் பலவித உணர்வுகளுக்கு இரையாகும் சாதாரண மனிதனே என்று சந்தேகமற தெரிந்தது.

என்னை பாதிக்காதவரை எதையும் என்னால் எத்தனை தெளிவாக சிந்திக்க முடிந்தது. ஆனால் எனக்கென்று ஒன்று வரும் பொழுது, செயல்களை செய்துக் கொண்டே பார்வையாளனாக இருப்பது சாத்தியபடுவதில்லை. என் இயலாமையை நினைத்துக் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

அப்பொழுது காற்றோடு காற்றாய் என் காதில் கண்ணன் கிசுகிசுத்தான் -

எதையும் யாரையும் புறம் சொல்லாதே
மனதில் தந்த வாக்காயினும் காப்பாற்று
உன் கடமையில் மட்டும் கவனம் கொள்
செயல்களை சிறிது பெரிது என்று பாகுபடுத்தாதே
அனைத்தையும் யக்ஞபாவத்துடன் செய்யக் கற்றுக்கொள்
உன் சிந்தனைகளை என்னிடம் திருப்பு
அனைத்தையும் எனக்கே அர்ப்பணம் செய்துவிடு
யாரேனும் உன்னை வெறுத்தாலோ ஒதுக்கினாலோ கலங்காதே
நல்லவை தீயவை என்று காணாத நான்
உன்னை முழுதாய் ஏற்றுக்கொள்ள தயாராயிருக்கிறேன்
பிறகு என்ன, நீயும் என்னைப் போல் பார்வையாளனாகி விடுவாய்

என்று கலகலவென சிரித்து மறைந்தான்.

‘அனைத்தையும் எனக்கே அர்ப்பணம் செய்து விடு’ என்கிறானே கண்ணன்.  இது சாத்தியமில்லையெனில் அவன் என்னை ஏற்றுக்கொள்வதும் சாத்தியமில்லையோ? எது தடையாக இருக்கிறது?

‘நான்’ என்ற அகந்தையல்லவா?

வெளிவேலை முடிந்து வீட்டில் வந்து அமர்ந்த போது, அந்த தனிமை நெஞ்சைத் தாக்க, எதிலும் பிடிப்பில்லாமல் மனம் பழையதை நினைத்து அலைபாய, வேறு புத்தகமோ, தொலைகாட்சியோ படிக்கப் பார்க்க விருப்பமின்றி அந்த இருட்டில் அமர்ந்திருந்த வேளையில், இனம் புரியாத வேதனையால் கண்களில் கண்ணீர் வடிந்தது.

யாரோ என் தோளைத் தொட்ட உணர்வில் திடுக்கிட்டால், இங்கும் கண்ணன் நிற்கிறான். அவன் இதழ்களிலோ புன்னகை.

நான் அழும் நேரத்தில் அவன் சிரிக்கிறான். சிரிக்கட்டும், சிரிக்கட்டும் என்று அவனை கண்டும் காணாமல் இருந்த என்னைப் பார்த்து,

“உன் நிலை எனக்கு புரிகிறது. நான் உன் காதில் உரைத்ததையும் மறந்து விட்டாய். சரி. பகவத்கீதை படித்துக் கொண்டிருந்தாயே, இதுவரை நான் கற்று தந்த பாடம் எதையும் நீ சரிவர புரிந்து கொள்ளவில்லை போலும். அதனால்தான் நானே வந்தேன். இதோ விரிவாக கூறுகிறேன்.”

என்னே இரக்க குணம் அவனுக்கு! நான் அவன் காலடியில் அமர, அவன் கருணையுடன் இதுவரை படித்ததையெல்லாம் திரும்ப வாய்மொழிந்து மேலும் தொடர்ந்தான்.....


கல்பத்தின் ஆரம்பத்தில் பிரஜைகளின் தலைவன் ஆனவன்
யாகங்களுடன் மக்களை படைத்துவிட்டு கூறினான்
வேள்வியின் மூலம் பெருகி ஸ்வதர்மங்களை செய்வீராக
நீங்கள் விரும்பும் போகத்தையும் அடைந்து மகிழ்வீராக

உங்கள் வேள்வி தேவர்களை வளர செய்யட்டும்
அத்தேவதைகள் உங்களை வளர செய்யட்டும்
ஒருவரையொருவர் தன்னலம் கருதாமல் செய்வதால்
இருவருமே மேலான நன்மையை அடைவீர்கள்

மனம் குளிர்ந்து தேவர்கள் தருவது ஏராளம்
எவனொருவன் தேவர்கள் அளித்த போகங்களை
அர்ப்பணம் செய்யாமல் அனுபவித்து மகிழ்கிறானோ
அவன் எக்காலமும் திருடன் என்றே கருதப்படுவான்

வேள்வியின் முறைப்படி அனைவருக்கும் படைத்திடுவாய்
எஞ்சிய உணவை உண்டு பாவங்களிலிருந்து விடுபடுவாய்
எவனொருவன் உடலின் சுகத்திற்காகவே உண்கிறானோ
அவன் பாவம் என்னும் மூட்டையை சேர்த்திடுவான்

உணவிலிருந்து உயிரினங்கள் உண்டாகின்றன
மழையினால் உணவு உற்பத்தியாகிறது
வேள்வியினால் மழை பொழிகிறது
கர்மங்களினால் வேள்வி விதிக்கப்படுகிறது

வேதத்தில் காண்பது கர்மங்களின் தொகுப்பாகும்
பரமாத்மனிடம் இருந்து வெளிப்பட்டதே வேதமாகும்
வேள்வியில் இருப்பவனும் பரமாத்மனே என்பதறிவாய்
எங்கும் நிறைந்த பரம்பொருளை வணங்கி போற்றுவாய்

நண்பனே! உன் குலத்தர்மத்தை கைவிடாதே
படைப்பு சக்கரத்திற்கு மாறாக நடக்காதே
புலன்களில் மயங்கி கடமையை தவறவிடாதே
இதனால் வீணன் என்ற பழியையும் சுமக்காதே


ஆனால் இதற்கு விதிவிலக்கும் உண்டு நண்பா. அதையும் கேள்....

எவனொருவன் ஆத்மாவில் நிலைத்திருக்கிறானோ
எவனொருவன் ஆத்மாவில் திருப்தியடைந்திருக்கிறானோ
எவனொருவன் ஆத்மாவில் மகிழ்ந்திருக்கிறானோ
அவன் செய்ய வேண்டியவை ஒன்றும் இல்லை

செய்வான் கர்மங்களை அவனும் இறுதிவரை
ஆனால் அவை தருவதில்லை கர்மபலன்களை
யாரையும் சார்ந்து அவன் இருப்பதுமில்லை
யாரிடமும் ஆக வேண்டியது ஒன்றுமில்லை

எனவே, கடமையை செவ்வனே செய்பவன்
பற்று என்னும் பந்தத்தை அறுத்திடுபவன்
அதன் பலன்களையும் எண்ணி பார்க்காதவன்
அவனே பரமாத்ம நிலையை அடைபவன்



பிறகு வந்து சந்திப்பதாகவும்  தான் கூறியவற்றை அசைபோடும்படியும் கூறிவிட்டு மறைந்தான்.

செய்யும் செயல்களின் முழு அகராதியையும் கூறிவிட்டானே. அதிலும் இந்த வரிகள் என் காதில் ரீங்கரித்தது.

புலன்களில் மயங்கி கடமையை தவறவிடாதே
இதனால் வீணன் என்ற பழியையும் சுமக்காதே

நன்றி, தோழனே! 

அதையே அசைப்போட்டுக் கொண்டிருந்த வேளையில், பள்ளியில் படித்த இந்த பாடல் வரிகள் ஏனோ சட்டென்று நினைவிற்கு வந்தன...

அகல்போல் எரியும் அன்பு
அது பகல்போல் மணம் பரவும்
நிலையாய் உன்னை நினைத்தால்
நான் மலையாய் உயர்வடைவேன்

ஞானத்தில் சிறந்து என்ன
உயர்தானத்தில் சிறந்து என்ன
தாழ்மையில் மனமில்லையோ
என் ஏழ்மையை என்சொல்வேன்
என் ஏழ்மையை என்சொல்வேன்


வாழ்வியலை புரிய வைக்க மறுபடியும் கண்ணன் வரமாட்டானா என்று ஏக்கத்துடன் அமர்ந்திருந்தேன்.

Logged

அன்பே சிவம்
பத்மஜா
padmaja
Global Moderator
phpBB SuperHero
*****

Karma: 1
Offline Offline

Bahrain Bahrain

Posts: 320



View Profile WWW
« Reply #21 on: July 12, 2009, 06:31:13 PM »

முத்து ஒன்பது


Take up one idea. Make that one idea your life - think of it, dream of it, live on that idea. Let the brain, muscles, nerves, every part of your body, be full of that idea, and just leave every other idea alone. This is the way to success, that is the way great spiritual giants are produced.

- Swami Vivekananda
...................


Sarvopanishado gavo
Dhogdaa gopalanandanah
Paarthovatsa sudhirbhoktha
Dhugdham geetamrutham mahat


யாரோ என்னைப் பார்ப்பது போன்ற உணர்வு. திரும்பினால் அந்தப் பெண் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. நான் அவளைப் பார்த்து நட்புடன் புன்னகைக்க என்னருகில் வந்தமர்ந்து பொதுவாக ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு, “நான் ஒன்று சொல்லட்டுமா?” என்று ஹிந்தியில் வினவினாள்.

“சொல்லுங்களேன்,” என்றேன் அந்த மராத்தி பெண்ணிடம்.

“நீங்கள் ஏதோ எழுதிக் கொண்டிருந்தீர்கள். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு உங்களின் வசீகரம் ஏதோ என்னை ஆட்கொள்ள உங்கள் முகத்தையே கூர்ந்து கவனித்தேன். எனக்கு face reading தெரியும்,” என்று கூற நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

மேலும் தொடர்ந்தாள்.

“உங்கள் மனம் சிந்தனை வயப்பட்டு இருந்தாலும் ஆழ்மனம் எப்பொழுதும் அமைதியாகவே இருக்கிறது. அந்த அமைதி உங்கள் முகத்தில் பிரதிபலிக்கிறது. உள்ளேயும் வெளியேயும் நீங்கள் கடைபிடிக்கும் மௌனத்தை நான் என்றுதான் கற்றுக் கொள்ளப் போகிறேனோ?” என்று சிலாகித்துக் கூறினாள்.

“அப்படியா,” என்று சிரித்தாலும் உள்ளே அதிர்ந்தேன்.

‘அகத்தில் உள்ளது முகத்தில் தெரியும் என்பார்கள். அது உண்மையா? இதைப்பற்றிப் படித்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு நுணுக்கமாய் தெரியுமா என்ன? என் அமைதியைப் பற்றி என்னத் தெரியும் இவளுக்கு? வேறு என்னவெல்லாம் தெரிந்திருக்கும்?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தவளை அவள் குரல் மீண்டும் தட்டி எழுப்பியது.

“எனக்கு கை கூட பார்க்கத் தெரியும்,” என்றுக் கூற நானும் விளையாட்டாக என் கையை நீட்டினேன். எனக்கும் வேறு வேலை இல்லை. பொழுது போக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். நல்ல டைம் பாஸ்தான் என்று நினைத்தது என்னவோ உண்மை. இருப்பினும் face reading வேறு செய்திருக்கிறாளே. சரி. வருவது வரட்டும் என்றும் ஓர் எண்ணம் ஓடியது. ஆனால் அவள் கூறியதைக் கேட்டு ஆச்சரியம். ஆச்சரியம். ஏனெனில் அந்த முன்னே பின்னே தெரியாத பெண் என் கடந்த காலத்தை ஒரு சில வரிகளில் கூறியது அனைத்தும் உண்மை.

இது மிக சமீபத்தில் நடந்தது. 

அவளிடம் இதை பற்றிக் கேட்டபோது, “வேறொன்றுமில்லை. இது சுத்த விஞ்ஞானமே. முறைப்படி கற்றால் யாரும் எளிதில் சொல்லலாம்,” என்றாள் சர்வசாதாரணமாக.

வியந்தேன்.

எதையும் முறையே கவனமுடன் ஒருமுகமாய் கற்றால் கைகூடிடுமோ? நாம் எதை கற்க வேண்டும், நம் மனம் எதில் லயித்திருக்கிறது என்று தெரிந்து கொண்டால் போதும். இதற்கு பல பட்டங்களோ, நுனிநாக்கு ஆங்கிலமோ, பிறரை மயக்கும் அழகோ, மற்றவரின் பாராட்டோ தேவையில்லை என்று அந்தப் பெண் எத்தனை அழகாய் சொல்லாமல் சொல்லிவிட்டாள்.

இவ்வாறு தன்னால் முடிந்ததை விஞ்ஞானம் என்று வேறு கூறுகிறாள்.

ஆராய்ந்து கண்டு தெளிந்து உலகுக்கு உணர்த்தி நமக்கும் கற்பிப்பதே விஞ்ஞானம் என்றால் மெய்ஞானமும் ஒரு விதத்தில் விஞ்ஞானமே என்று பல கிரந்தங்கள், உபநிடத நூல்கள், புராணங்கள் என்று சான்றோரும் ஞானியரும் கண்டு, உணர்ந்து எழுதியவற்றை மட்டும் ஏன் தெரிந்து கொள்ள விரும்பாமல் தர்க்கம் செய்கிறோம்.

இன்னும் சொல்லப் போனால், யாரோ ஒருவர் ப்ளூட்டோவை கோள் என்றால் நாமும் கோள்தான் என்று ஒப்புகொள்கிறோம். சிலகாலம் கழித்து ஒரு சிலர் மட்டும் பலவித ஆய்வுகள் நிகழ்த்தி, பல பரிமாணங்களை அலசி ப்ளூட்டோ கோள் இல்லை என்று பிரகடனம் செய்தால் அதையும் மறுக்காமல் ஏற்கிறோம்.

இதுதான் விஞ்ஞானமோ?

என் கண்களால் ப்ளூட்டோவை தினமும் காண்கிறேனா என்ன? இருப்பினும் ஏன் ஒப்பு கொள்கிறேன்?

இது ஒரு சிறு உதாரணமே. நான் விஞ்ஞானம் என்று படித்த, படிக்கும் பலவும் இப்படித்தான். யாரோ ஆராய்ந்து கண்டறிந்ததை நானும் சிறு வயதிலிருந்து மண்டையில் ஏற்றிக் கொள்கிறேன். அன்றாட வாழ்வில் நானாக எதையும் காண்பதில்லை, உணர்வதில்லை, அறிவதில்லை.

ஒரு விதத்தில் இது அபத்தமோ என்றுகூட தோன்றுகிறது.

ஆனால் யுகங்களாய் ஒரே உண்மையை ஞானிகள் எடுத்துரைத்து சில வழிமுறைகளையும் கற்றுத் தந்து ‘நீங்களும் உணரலாம்; உணருங்கள்; உணர வேண்டும்’ என்று கூறும் போது அதை ஏன் ஏற்பதில்லை?

மெய்ஞானம் உணர
அறிவு தேவையில்லை
அழகு தேவையில்லை
பணம் தேவையில்லை
தகுதி தேவையில்லை
ஆனால்
அகந்தை அழியும்
பொறாமை விலகும்
உயிரை மதிக்கும்
பொறுமை சேரும்
அமைதி பரவும்
மௌனம் உணரும்

என்று அவர்கள் அனைவரும் ஒருசேர கூறுவது நம்மால் ஏன் ஏற்க முடியவில்லை?
Logged

அன்பே சிவம்
பத்மஜா
padmaja
Global Moderator
phpBB SuperHero
*****

Karma: 1
Offline Offline

Bahrain Bahrain

Posts: 320



View Profile WWW
« Reply #22 on: July 12, 2009, 06:38:18 PM »

பணத்திலே மூழ்கி, அதிகாரத்தால் பிறரைக் கவிழ்த்தி, மனிதத்தன்மையை மிதித்து, சத்தமாய் பிறரைப் பார்த்து சிரித்து, மமதையுடன் வலம் வருவதால்தான் இந்த எளிய போதனைகளை ஏற்க முடியவில்லையோ?

சரி. இதை விடுத்து சான்றோர் கண்டுணர்ந்த வழிமுறைகள் எவையெவை என்று எனக்கு தெரிய வேண்டுமெனில் யார் எனக்கு புரியும் வண்ணம் பொறுமையாய் கற்றுத் தருவார்?

‘உன்னருகிலேயே நானிருக்கிறேனே’ என்று கிருஷ்ணன் கீதையிலிருந்து கலகலவென சிரிக்கிறான். உங்களுக்கும் கேட்கிறதல்லவா?


என் நண்பன் சொல்கிறான் –

பெரும்பேறு அடைவது அத்தனை சுலபத்தில் முடியாதடா
கர்மங்களை செவ்வனே செய்தாலொழிய அதை உணர முடியாதடா
ஜனகரும் மற்றபிற ஞானிகளும் பேரின்பமடைந்தது இவ்வழியில் தானடா
இனி உலகை பேணிகாக்க வேண்டியாவது செயல்களை செய்வாயடா


இதை கேட்ட மாத்திரத்தில் மலைக்கிறேன். நான் என் கடமைகளை செய்கிறேனா இல்லையா? கடமைகளை நான் எந்த நோக்குடன் செய்கிறேன்? எனக்கும் ஞானிக்கும் என்ன வித்தியாசம்?

‘கவலைப்படாதே. நான் சொல்கிறேன் உனக்கு’ என்கிறான் என் தோழன்.


முதலில் சான்றோரின் பெருமையை இவ்வாறு கூறுகிறான் -

சான்றோர் அமர்ந்தால் மற்றவர் அமர்வார்
சான்றோர் சிரித்தால் மற்றவர் சிரிப்பார்
சான்றோர் நடத்தையை அப்படியே ஏற்பார்
சான்றோர் வகுத்த பாதையை மக்கள் பின்பற்றுவார்


‘இத்தனை பேசுகிறாயே. நீயெப்படி?’ என்று நான் கேட்டு விடுவேனோ என்று பயந்து மேலும் கூறுகிறான் -

மூவுலகிலும் நான் செய்ய வேண்டியது ஏதுமில்லை
அடைய வேண்டியவை என்று ஏதுமில்லை
செயல்களை செய்ய வேண்டிய அவசியமில்லை
இருப்பினும் செயலற்று நான் என்றும் இருப்பதில்லை


சிறிது சிந்தித்துப் பார்........

சோம்பேறியாக நான் இருந்தால் என்னாகும் தெரியுமா
கர்மங்கள் எனக்கு அவசியமில்லை என்று மனிதனுக்கு தெரியுமா
என் செயலின்மையை மட்டுமே காண்பார் தெரியுமா
என் வழி இதுவே என்றே அவரும் பின்பற்றுவார் தெரியுமா


சரி. இப்படி நான் செயலின்றி இருந்தால் என்னாகும்? எவையெல்லாம் நடக்கும்? கேட்பாய் நீயும் ....

அண்டத்தின் அற்புதங்கள் ஒரு நொடியில் அழியும்
உலகங்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும்
நால்வகை வர்ணங்களில் சீர்குலைவு உண்டாகும்
பிறகென்ன, நான் உயிர்களை அழிப்பதும் உறுதியாகும்

பற்றுடன் கர்மங்களை செய்பவன் அஞ்ஞானி
பற்றின்றி கர்மங்களை செய்பவன் மெய்ஞானி
அஞ்ஞானியின் சுயநலத்தால் அவனுக்கு நன்மை
மெய்ஞானியின் பொதுநலத்தால் உலகுக்கே நன்மை

பரமாத்மனில் திளைத்திருக்கும் ஞானியானவர்
கர்மப் பற்றுள்ள அஞ்ஞானியை குழப்பக்கூடாது
கர்மங்களை சிரத்தையாய் செய்யவே வழிநடத்தி
பக்தியுடன் செயல்களை தானும் செய்திடல் வேண்டும்


கர்மங்களில் பற்றுக் கொண்டுள்ள அஞ்ஞானியின் நிலையைப் பற்றி ஓர் உண்மையை உனக்கு சொல்கிறேன் கேள், நண்பா……

இவ்வுலகில் அனைவரும் செயல்களை புரிவது எதனால்
பிரகிருதியிலிருந்து பிரிக்க முடியாத குணங்களால்
மனதை திரையிட்டு மறைக்கும் அகங்காரத்தால்
‘நானே செய்பவன்’ என்றே நினைக்கும் அறியாமையால்

 
ஆனால், ஞானியின் நிலையென்ன. அவருக்கும் குணங்களுக்கும் என்ன சம்பந்தம்? தொடர்ந்து கேள்.....

குணங்களின் விசேஷங்களை நன்கே அறிவார்
கர்மங்களின் தன்மையுணர்ந்து செவ்வனே செய்வார்
உண்மையை உணர்ந்ததால் இவற்றை ஏற்று நடப்பார்
இருப்பினும் பற்றற்று இவ்வுலகில் வாழ்வார்


மீண்டும் எச்சரிக்கிறேன். பிறருக்கு போதனைகள் செய்கிறேன் பேர்வழி என்று எதையும் செய்வது சரியல்ல. நான் கூறுவதை கவனமாய் மனதில் இருத்திக் கொள்....

குணங்களால் மயங்கி பற்றுடன் வாழும் அஞ்ஞானியை
குணங்களை வென்ற மெய்ஞானி குழப்பக்கூடாது
குறைகளுடன் செயல் புரிந்து வாழும் அஞ்ஞானியை
குறையற்ற மெய்ஞானி தடுமாற விடக்கூடாது


[ஆஹா..... குரு யார் என்று புரிந்து கொள்ள நல்ல அளவுகோல் அல்லவா இது]

அனைத்தும் அறிந்தவன் பரமாத்மன் ஆன என்னிடம்
அனைத்து கர்மங்களையும் அர்ப்பணம் செய்வாய்
ஆசையற்று அகந்தையை அறவே ஒழித்து
என்னில் மனதை நிறுத்தி வாழ்க்கையெனும் போர் புரிவாய்

எவரொருவர் என் உபதேசத்தை குற்றங்குறை காணாமல்
சிரத்தையுடன் ஏற்று செய்கிறாரோ அவர் கர்மங்களிலிருந்து விடுபடுவார்
ஆனால் எவரொருவர் பின்பற்றாமல் பழிக்கிறாரோ
ஞானமற்று பாகுபடுத்தும் அறிவின்றி அழிவை நோக்கி செல்வார்


உடல் சிலிர்க்கிறது எனக்கு. கடைசி வரிகள் பயமுறுத்துவதைப் போல் இருந்தாலும் இந்நான்கு வரிகளை மனதில் நிறுத்தி செயல் புரிந்தால் போரில் வெற்றியே என்று புரிகிறது. மீண்டும் வாசிக்கிறேன்....

அனைத்தும் அறிந்தவன் பரமாத்மன் ஆன என்னிடம்
அனைத்து கர்மங்களையும் அர்ப்பணம் செய்வாய்
ஆசையற்று அகந்தையை அறவே ஒழித்து
என்னில் மனதை நிறுத்தி வாழ்க்கையெனும் போர் புரிவாய்



தோழன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். இந்த பாடலை அசைபோடுகிறேன்.

மலரென மனதினை திறந்து வைத்தேன்
அதில் மணமென இணைந்திட உனை அழைத்தேன்
உளம் எனும் அகலினில் உன்னை வளர்ப்பேன்
அங்கு உயர்ந்திடும் சுடரினில் எனை அறிவேன்

அகத்தினில் ஆலயம் அமைத்திடுவேன்
அங்கு உகந்ததோர் பலியினை நடத்திடுவாய் (2)
தலைவனே உளமெல்லாம் நிறையும்
உந்தன் பலியுடன் கலந்து யான் உயர்ந்திடுவேன்

அலைந்திடும் மனதினுக்கமைதியையே
என்றும் விளைந்து யான் விரைந்தெனன் உனதகமே
அன்னலே வெள்ளமென பெருகும்
அருள் புண்ணிய சுனையினை பருகிடுவேன்


நான் படித்த கிருத்துவப் பள்ளியில் அந்த வெள்ளை தேவதைகள் பாடிய பாடல் இது. அதன் அர்த்தம் புரிந்து இப்பொழுது கண்களில் நீர் நிறைகிறது.
Logged

அன்பே சிவம்
பத்மஜா
padmaja
Global Moderator
phpBB SuperHero
*****

Karma: 1
Offline Offline

Bahrain Bahrain

Posts: 320



View Profile WWW
« Reply #23 on: July 27, 2009, 08:18:23 AM »

முத்து பத்து


The voice of the ignorance speaks loud and long
But the words of the wise are quiet and few

-   Ancient proverb

…………..

கடலிலிருந்து எழும் சுட்டெரிக்கும் சூரியனை
நனையாமல் சிவப்பாய் காட்டும் கண்கள்
நட்சத்திரங்களை என் தாவணியில் தைத்துக்கொள்ள
தூண்டும் மின்மினியாய் காட்டும் கண்கள்
சிறுவயதில் பெரிதாயும் வாலிபவயதில் சிறிதாயும்
காட்டி என்னை குழப்பும் கண்கள்
வெற்றி தோல்வி மாறி வரும்பொழுதெல்லாம்
ஏமாற்றி ஏமாந்து அழும் கண்கள்
குருவின் அகக்கண் என்னகத்தை அலசும்பொழுது
மகிழ்வுடன் என் கண்களும் மூடியே சிரிக்கின்றனவே!
இது என்ன விந்தை! இது என்ன நிம்மதி!
இது என்ன நிலை! இது என்ன அமைதி!



பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமம். உருவ வழிபாடு இல்லாத இடம்.

அந்த மதில்சுவற்றுக்கு வெளியே சொகுசு வண்டிகளின் பரவச அணிவகுப்புகளும் அதிலிருந்து இறங்கும் சுற்றுலா பயணிகளும் வீதியோர இளநீர் கடைகளும் மற்றும் இதர கடைகளும், குறத்திகளின் தொந்தரவுகளும் என்று ஜனரஞ்சகமாக இருக்கும் தெரு அது.

அருகில் வா வா என்று கெஞ்சும் கடற்கரை வேறு. அங்கு குழுமும் கூட்டம் வேறு உண்டு.

ஆனால் ஆசிரமத்தின் உள்ளே நுழைந்து விட்டால் குண்டூசி போட்டால் சப்தம் கேட்கும்.  வெளியிலோ ஒரே கூச்சல்; உள்ளே நுழைந்தால் ஏதோ sound proof  உலகிற்கு வந்ததைப் போல் ஓர் உணர்வு இருக்கும். 

இந்த இரைச்சல் அனைத்தும் வேறு உலகை சேர்ந்தவைப் போல் தெரியும். உள்ளே நுழைந்தவுடனேயே நம் வாயை யாரோ கட்டிப் போட்டதைப் போல் உணர முடியும். அங்கு நிலவும் அமைதி எங்கும் காணக்கிடைக்காத அமைதியென்று புரியும். அழகான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அரவிந்தரின் சமாதியருகில் சென்றாலே மனதின் இரைச்சல் பேரிரைச்சலாகி நம் நிலையை எடுத்துக் காட்டிவிடும்.

ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி அந்த அமைதியை ரசித்து மனதை ஒருமுகப்படுத்திவிட்டு வெளியே வரும் பொழுது இவ்வுலகின் இரைச்சல் எரிச்சலை ஏற்படுத்தும். மனதின் விதண்டாவாதங்கள் அனைத்தும் சிறிது அடங்கி பேச வார்த்தைகளின்றி கடலையே பார்க்க தோன்றும்.  பிறகு ஓயாத கடலலைகளை காணும் பொழுது தன் நிலையை உணர்ந்து மனம் வருந்தும்.

உலகிற்கு நல்முகத்தை காட்டி உள்ளே அழுக்கை நிரப்பி வைத்துக் கொண்டு இரட்டை வேடம் போட்டு, யார் கண்ணுக்கும் தென்படாமல் மனதின் இருட்டறையில் மறைந்து கொண்டு வாழும் சாத்தானை அழித்து வெண்மையாய் ஒளியாய் மாறிவிடத் உயிர் துடிக்கும்.

மறுபடியும் ஆசிரமத்திற்கு சென்று அமர்ந்து கொள்ளலாம் போல் தோன்றும்.

அந்த அமைதியை எங்கும் எடுத்து செல்ல முடியுமா?


அந்த ஆசிரமத்திற்கு மிக அருகில் பிரசித்திப் பெற்ற மணக்குள விநாயகர் வெகு ஜோராக வெள்ளியில் பணக்காரக் களையுடன் காட்சித் தருவார். அர்ச்சகரிடமிருந்து ஒவ்வொரு முறையும் தாமரை கிடைக்கும் பொழுது அந்த விநாயகரே ஆசிர்வதித்ததைப் போல் ஒரு பிரமை ஏற்படும். மனம் அமைதியடையும். கையில் பிரசாதம் வாங்கி வெளியில் வந்தால் அழகான குட்டி யானை (பெயர் மறந்து விட்டேன்) ஒன்று கொலுசு கட்டி அலங்காரத்துடன் மிகவும் சந்தோஷமாய் தலையாட்டிக் கொண்டு நிற்பதைக் காணும் பொழுது மனம் சந்தோஷமடையும். அங்கேயே அமர்ந்து ரசித்துக் கொண்டேயிருக்கலாம் போல் தோன்றும். கவலைகளை எல்லாம் மறந்து தற்காலிகமாய் அமைதியடைந்த மனம் மறுபடியும் பிள்ளையாரை பார்க்க மாட்டோமா என்று ஏங்கும்.

அந்த அமைதி நிரந்தரமாய் இருக்க வேண்டும் என்றும் தோன்றும்.

ஆக எனக்கு புரிய வேண்டியது உருவமில்லா நிலையிலும் உருவம் உள்ள நிலையிலும் ஒரேவித அமைதியைதான் உணர்கிறேனா?

‘ஏகம் சத்விப்ரா பஹுதா வதந்தி (ekam sadvipra bahuda vadanti)’ என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒருவருக்கு கணக்கு பிடித்திருக்கலாம்; மற்றொருவருக்கு மொழிப்பற்று மிகுதியாய் இருக்கலாம்; வேறு ஒருவரோ அறிவியலே சிறந்தது என்று வாழ்நாள் முழுவதும் அதிலேயே கவனத்தை செலுத்தலாம்; வேறு சிலரோ ஓவியம், நாட்டியம், சிற்பம் என்று உயிர் வாழ இலட்சியப் பாதையை வகுத்துக் கொள்ளலாம்.

கணக்கர்களுக்கு இசை பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அறிஞர்களுக்கு மொழியின்பால் காதல் ஏற்பட வேண்டிய அவசியமில்லை.

இப்படி அவரவர் விருப்பம் மாறுபட்டு இருப்பதாலேயே உண்மையுணர பலவித தெய்வ உருவங்கள் உருவாக்கப்பட்டது.

எதற்கு?

உரிமையுடன் இவ்வாறு கூறுவதற்கே.....

எத்தனை குறைகள், எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன், எத்தனை செய்யினும்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென்று அன்பாய் பிரியமளித்து
மைந்தெனன் மீதுன் மனமகிழ்ந்தருளி
தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய்......


ஆனால் உருவங்கள் ஏன்? உருவமற்ற அந்த பரஞ்ஜோதியை ஏன் நேரடியாக தொழக் கூடாது?


கூடாது என்றெல்லாம் ஒன்றுமில்லை. முடிவதில்லை என்பதே உண்மை. ஆகவேதான், ஆச்சார்யர்கள் துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் என்று ஏணிப்படிகளை வைத்துள்ளார்கள்.
Logged

அன்பே சிவம்
பத்மஜா
padmaja
Global Moderator
phpBB SuperHero
*****

Karma: 1
Offline Offline

Bahrain Bahrain

Posts: 320



View Profile WWW
« Reply #24 on: July 27, 2009, 08:19:58 AM »

இதில் கொடுமை என்னவென்றால், துவைத நிலையிலேயே நிரந்தரமாக தங்கி உன் கடவுள் மட்டம், என் கடவுள் மட்டுமே உசத்தி, உன்னுடையது கடவுளே இல்லை, நான் வணங்கும் தெய்வத்திடம்தான் உன் தெய்வம் வந்து நிற்கும் என்றெல்லாம் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கிறோம்.

அனைத்து உருவிலும் இருப்பது இறைவன் ஒருவரே என்றும், ‘உன் நம்பிக்கையை நான் மதிக்கிறேன்’ என்றும் கண்ணோட்டம் விரிந்து இந்த ‘உண்மை’யை புரிந்து, மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமென்பதே அந்த வரியின் பொருள் ஆகும்.

இத்தனை புரிந்து கொண்ட மனம், ‘நான் பார்வையாளனே’ என்றும் புரிந்து உணர்ந்து விட்டால் நிரந்தர அமைதிதான்.

சரி. இறைவன் ஒருவனே என்று புரிந்து கொள்ளும் பக்குவம் அடைந்து விட்டேன் என்றே வைத்து கொள்வோம்.

ஆனால், இந்த பார்வையாளன் என்ற மனோபாவம் மட்டும் அத்தனை எளிதில் எனக்கு வருவதில்லையே? ஏன்?

‘நான்’, ‘எனது’ என்ற அகங்காரம் இருக்கும் வரை அது வரவே வராது என்கிறார்கள் ஞானியர்.

உலகில் ஒருவரைப் போல் மற்றொருவர் இருப்பதில்லை. இது சத்வ-ரஜ-தமோ குணங்களின் விகிதம் மாறுபடுவதால் ஏற்படுவது. ஆனால், குணங்களை கடந்து, அகங்காரத்தை அழித்து ஞானி நிலை அடைந்தவர்கள் அனைவரும் ஒரே போல்தான் இருப்பார்களா என்ன?

இந்த கேள்விக்கான விடையை யாரிடம் கேட்பது என்று தவித்துக் கொண்டிருந்தேன்.

கீதையை திறந்து வைத்து உட்கார்ந்தேன். எனக்கே கூறப்பட்டுள்ளதைப் போல் இருக்கிறது கண்ணனின் மறுமொழி.


ஞானியே தம் இயல்பைக் கொண்டு நடக்கும் பொழுது
உயிரினங்கள் தத்தம் இயல்பால் செயல் புரிவதில் வியப்பென்ன
ஒருவரிடமிருந்து மற்றொருவர் வேறுபட்டு வாழும் பொழுது
இம்மாறுபாட்டை காண்பதில் தான் சந்தேகமென்ன


சிறிது சிந்தித்துப் பார்க்கும் பொழுது தெரிவது என்ன – அரவிந்தரைப் போல் ராமகிருஷ்ணர் இல்லை. ராமகிருஷ்ணரைப் போல் ரமணர் இல்லை. ரமணரைப் போல் விவேகானந்தர் இல்லை. விவேகானந்தரைப் போல் மத்வர் இல்லை. மத்வரைப் போல் இராமனுஜர் இல்லை என்று ஒருவரிலிருந்து ஒருவர் மாறுபட்டு இருக்கின்றனர் – வெளிப் பார்வையில்.

முதல் காரணம் வாழ்க்கை பிண்ணனி மற்றும் குடும்ப சூழல். இரண்டாவது காரணம் வசிக்கும் காலக்கட்டம். மூன்றாவது காரணம் அவரவர் பிறப்பின் நோக்கம். இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்.

சாமானியருக்கோ கேட்கவே வேண்டாம். என்னை போல் நீங்கள் இல்லை. உங்களைப் போல் உங்கள் குழந்தை இருப்பதில்லை.

ஆக, இது இயல்பே என்று அப்படியே விட்டுவிடலாமா?

‘கொலைகாரன் கொலை செய்து கொண்டிருக்கட்டும்; அடக்குபவன் அடக்கிக் கொண்டிருக்கட்டும்; அடங்குபவன் அடங்கி கொண்டிருக்கட்டும். குடிகாரனும் சூதாடியும் அவனவன் போக்கிலேயே இருக்கட்டும்,’ என்று இருந்தால் அட்டூழிய சால் புனித பால் ஆனதன் அர்த்தம் என்னவாக இருக்கும்? ஜகையும் மதையும் ரவுடிகளாகவே இருந்திருக்கலாமே? வேடன் வால்மீகி ஆவதற்கு அவசியம்தான் என்ன?

கண்ணனிடம் கேட்போமா?

கீதையிலிருந்து கண்ணன் சொல்கிறான் –

முதலில் இம்மாற்றங்களின் காரணம் என்ன என்றும் அவற்றை கையாளும் விதத்தையும் தெரிந்து கொள்வாய்…..


திருடனாய் மனதை நாசப்படுத்தும் ஆற்றலுண்டு
பொருட்களின் மேல் வர்ணங்களை பூசும் சக்தியுண்டு
விருப்பும் வெறுப்புமே இவையென்று புலன்களே சொல்வதுண்டு
பகைவனாய் நினைத்து இவற்றை ஒதுக்குபவரே உயர்வதுண்டு

அடுத்தவரின் கடமையை அருமையாய் ஆற்றுவதைவிட
சிறப்பற்ற உன் கடமையை செவ்வனே செய்வாய்
அடுத்தவரின் கடமையில் காணும் பயத்தைவிட
இறப்பை எதிர்நோக்கினாலும் உன் கடமையை மட்டும் செய்வாய்


இப்பொழுது கண்ணன் என்னதான் சொல்கிறான். பாரதத்தில் அர்ச்சுனனைப் பார்த்து ‘நீ க்ஷத்திரியன், வீரமே உனக்கு அழகு,’ என்கிறான். சரி. ஆனால் வாழ்வை புரிந்து கொள்ள துடிக்கும் என்னிடம் இப்பொழுது இன்னும் தெளிவுற கூற வேண்டாமா. எனக்கு வாழ்வே குருக்ஷேத்திர போல் அல்லவா இருக்கிறது.

ஆகையால் நான் கேட்கிறேன்....


வரிசையாய் அடுக்கி விட்டு வேடிக்கைப் பார்க்கும் கண்ணா
பாவம் செய்ய தூண்டுபவை எவை என்றே கூறுவாய் வார்ஷ்னேயா
ஏதோ சக்தியால் உந்தப்பட்டு செயலிழக்க வைப்பது எதனால் மனமோகனா
என்னுள் இருக்கும் எதிரி யாரென்று சொல்வாய் கேசவா


அதற்கு கண்ணனின் மறுமொழியோ –

மிடுக்கென பெருமிதமாய் நடக்கும் ரஜோகுணம்
படக்கென குரோதமாய் மாறி பாவம் புரியும்
அசைபோட்டு சிறிது சிந்தித்தால் தெரியும்
ஆசையே இதன் காரணமென்பது விளங்கும்


பாவம் என்பது என்ன? ஒவ்வொரு மதமும் நம்பிக்கையும் பாவத்தைப் பற்றி விதவிதமாக அல்லவா கூறுகின்றனர். உண்மையில் இறைவன் தண்டிப்பானா என்ன?

இந்துமத நம்பிக்கைப்படி இறைவன் முழுசுதந்திரத்தையும் சில கோட்பாடுகளையும் மனிதனுக்கு தந்திருக்கிறான். அப்பேற்பட்ட சுதந்திரத்தை அவன் துஷ்பிரயோகம் செய்தால் அதன் பலனை அனுபவிப்பது அவன்தானே தவிர இறைவன் வந்து தண்டிப்பது இல்லை என்கிறது. இது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.

ஆனால், இதன் ஆணிவேர் எங்கே என்று கண்ணனே கூறுகிறான். ஆம். அது ஆசையே என்கிறான். மேலும் கேட்போம்.......
Logged

அன்பே சிவம்
பத்மஜா
padmaja
Global Moderator
phpBB SuperHero
*****

Karma: 1
Offline Offline

Bahrain Bahrain

Posts: 320



View Profile WWW
« Reply #25 on: July 27, 2009, 08:20:51 AM »


நெருப்பை புகை சூழ்வதைப் போல
கண்ணாடியில் தூசி படிவது போல
சிசுவை கருப்பை மறைப்பதைப் போல
ஞானத்தை ஆசையும் குரோதமும் மறைக்கிறது

ஆசையை அடக்குவது மிகவும் கடினம்
புலன்கள், மனம் மற்றும் புத்தியே இதன் இருப்பிடம்
இவை மூலம் ஆடுவது மனிதனின் எண்ணம்
மயக்கத்தில் ஞானமும் மறைவது திண்ணம்

பாரத மகனே! முதலில் புலன்களை அடக்குவாய்
அறிவை மறைக்கும் குரோதத்தை வெற்றிக்கொள்வாய்
அஞ்ஞானத்தை கிழித்து ஞானத்தில் சிறப்பாய்
இதன் மூலமான ஆசைகளை அழித்து உயர்வடைவாய்

உடலை விட சிறந்தது புலன்களே
புலன்களை விட சிறந்தது மனமே
மனதை விட சிறந்தது புத்தியே
புத்தியை விட மிக சிறந்தது ஆன்மாவே

புத்தியை விட சிறந்த ஆன்மாவை உணர்ந்து
அகந்தையை அழித்து ஆன்மாவில் நிலைத்து
வெல்லக் கடினமான ஆசையை கிழித்தெறிந்து
வாழ்வெனும் போராட்டத்தில் சிறப்பாய் நண்பனே


எத்தனை அருமையான விளக்கம்! நன்றி, கண்ணா. நீயென் நண்பனாய் அமைந்தது என் பாக்கியம் அல்லவோ!

கர்மங்களை செய்யும் விதத்தையும் சுக-துக்கத்தின் காரணத்தையும் மிக தெளிவாய் விளக்கியுள்ளான். இதைப் பற்றி நன்கு சிந்தித்து செயல்படுவது என் கையில் அல்லவோ இருக்கிறது!

இத்துடன் மூன்றாம் அத்தியாயம் நிறைவு பெறுகிறது. புத்தகத்தை மூடி வைக்கிறேன். பூஜையறையில் தனியே அமர்ந்து கண்களை மூடிப் பார்க்கிறேன்.

அமைதியான தருணத்தில் எழுதிய கவிதை ஒன்று மனதில் ஓடுகிறது....


அலையென முழங்கும் எண்ணங்களில்
என்னை உணர்ந்த தருணங்களில்
இருளான பாதையில் நுழைகையில்
அறிந்தேன் நான் ஆசையின் பிடியில்

அமர்ந்தேன் முகப்பில் பொறுமையுடன்
கேட்டேன் காலடிச்சத்தம் கவனமுடன்
எழுந்தேன் கொல்வதென்ற முடிவுடன்
இல்லையெனில் வாழவிடுமா அமைதியுடன்

எண்ணமெனும் ரம்பையின் நாட்டியத்தில்
என்னையே இழக்கவிருந்த நேரத்தில்
உண்மையை புரிந்துகொண்ட சிலிர்ப்பில்
வேரோடு பிடித்தேன் அதை தியானத்தில்


ஆசைகள் கால்பிடித்து கெஞ்சினவோ
எண்ணங்கள் கதவைதட்டி நுழைந்தனவோ
பலவித செருக்கையும் அழித்தனவோ
என்சிரிப்பில் கள்ளமனைத்தும் அழிந்தனவோ

எனக்கென வரலாறு ஏதுமில்லை
விதியென பேசுவதில் அர்த்தமில்லை
ஆசான் நானே வேறு யாருமில்லை
மெளனமே என்றென்றும் எந்நிலை

காண்பவை மெளனத்தின் வெளிபாடே
எண்ணங்கள் மெளனத்தின் வெளிபாடே
ஆனால் மெளனம் அனைத்தையும் தாண்டியநிலை
ஏனெனில் மெளனமே ஆத்மனின் நிலை

புரியாமல் எழுதிய இக்கவிதையை உண்மையில் புரிந்து கொள்ள கண்களைத் திறந்து கண்ணனின் அறிவுரைகளை மனதில் நிறுத்தி என் கடமையை செய்ய விழைகிறேன்.
Logged

அன்பே சிவம்
பத்மஜா
Pages: 1 [2]   Go Up
Print
Jump to:  



Login with username, password and session length

Powered by SMF 1.1.11 | SMF © 2006-2009, Simple Machines LLC
Template made by Megamoose (WonderForum.com)
Page created in 0.167 seconds with 20 queries.